தமிழ்நாடு

இன்றும் அரங்கேறும் இரட்டை குவளை முறை

webteam

தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு பாவச்செயல் என்ற வாசகம் பாடப்புத்தகங்களில் உள்ளன.......... ஆனால் இதில் வருத்தப்பட விஷயம் அவை பாடப்புத்தகங்களில் மட்டும் இடம்பெற்றிருப்பது தான். மதுரை மாவட்டத்தில் பல தேநீர் கடைகளில் இன்றும் இரட்டை குவளை முறை கடைப்பிடிக்கப்படுகிறது. 

சக மனிதர்களை சாதீய ரீதியில் பிரித்துப்பார்ப்பதும், அவர்களிடம் தீண்டாமை எனும் கொடுஞ்செயலைச் செய்வதும் இன்றும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.   மதுரையில் ஒரு கிராமத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்படும் இரட்டை குவளை முறை, புதியதலைமுறையின் பிரத்யேக கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
தீண்டாமை அரங்கேறுவதை வெளிப்படுத்தும் இடமாக தேநீர் கடைகளே இன்றளவும் திகழ்கின்றன. அப்படி ஒரு இடத்தை மதுரை மாவட்டம் மருதங்குடியில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த தேனீர் கடையின் திண்ணையில் அமர்ந்தபடி உயர்சாதியினர் தனி குவளையில் தேனீர் குடிப்பதையும், அவர்களிடம் இருந்து சற்று தள்ளி, தரையில் அமர்ந்தபடி, பிளாடிக் குவளைகளில் தாழ்த்தப்பட்டோர் தேனீர் குடிப்பதையும் காண முடிந்தது. அங்கிருக்கும் நாற்காலியிலோ, திண்ணையிலோ அமர தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்த கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பேசியபோது, சாதிய அடக்குமுறைகளுக்கு அஞ்சி அவர் முகம்காட்ட மறுத்தார். தனது பெற்றோர் தற்போதும்கூட இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சுவதாகக் அவர் குறிப்பிட்டார். கடந்த 2012ம் ஆண்டு எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் என்பவர் நடத்திய ஆய்வில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 463 தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை கடைபிடிக்கப்பட்டதை கண்டறிந்ததாக ஆதாரங்களோடு குறிப்பிட்டார். ஆனாலும், இந்த இரட்டை குவளை முறை தற்போதுவரை நடைமுறையில் இருப்பதன் மூலம், தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது என கதிர் தெரிவித்துள்ளார். சமூகத்தில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மனிதர்களை வேறுபடுத்தும் நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமையின் கோரப்பிடி இறுகுவதற்கு முன் அவற்றை முழுவதுமாக அகற்ற வேண்டிய கட்டாயமும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.