தமிழ்நாடு

ஒதுக்கப்பட்ட திருநங்கை மருத்துவர்: ஆதரவற்று நின்றவருக்கு மறுவாழ்வு கொடுத்த பெண் போலீஸ்

ஒதுக்கப்பட்ட திருநங்கை மருத்துவர்: ஆதரவற்று நின்றவருக்கு மறுவாழ்வு கொடுத்த பெண் போலீஸ்

kaleelrahman

மதுரையில் ஆதரவின்றி நின்ற திருநங்கையை மருத்துவராக்கி மருத்துவ சேவையை தொடங்க உதவி செய்த பெண் காவல் ஆய்வாளர். காவல்துறை என்றாலே கடுமையாக நடந்து கொள்வார்கள் என சமூகத்தில் பரவலாக பேசப்படும் நிலையில் பெண் காவல் ஆய்வாளர் கவிதா காக்கிக்குள்ளும் கருணை இருப்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

மதுரை மாநகர் திலகர் திடல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திலகர் திடல் காவல்நிலைய சட்டம் ஒழுங்கு பெண் ஆய்வாளர் கவிதா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது ரயில்வே நிலையம் பகுதியில் நின்ற திருநங்கை ஒருவரை அழைத்து விசாரித்துள்ளார். அதற்கு அந்த திருநங்கை சரளமாக ஆங்கிலத்தில் ஆய்வாளருக்கு பதில் அளித்துள்ளார்.


இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த ஆய்வாளர், அவர் குறித்து கேட்டபோது தான் எம்பிபிஎஸ் முடித்த நிலையில் தனது உணர்வுகள் மாறி ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாகவும் தான் மருத்துவராக பணிபுரிந்துவந்த தனியார் மருத்துவமனையில் திருநங்கை என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட பெண் காவல் ஆய்வாளர் அவரின் சான்றிதழ்களை எடுத்துவரக் கூறியுள்ளார். அவரும் சான்றிழ்களை எடுத்து வந்த காட்டியதும் அது உண்மையென தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ சான்றிதழ் உறுதியானது தான் எனவும் விசாரணை நடத்திய நிலையில் திருநங்கைக்கு ஆய்வாளர் ஆறுதல் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை தனது உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்ற பெண் ஆய்வாளர் கவிதா ஆதரவின்றி நின்ற திருநங்கைக்கான சான்றிதழை பெற்று கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரின் மருத்துவ சேவையை தொடர வேண்டும் என எண்ணி அவருக்கு மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார் காவல் ஆய்வாளர் கவிதா.

மேலும் தனிநபர் ஒருவரின் உதவியுடன் அரசின் உரிய வழிகாட்டுதல்களோடு கிளினிக் ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார். ஆதரவின்றி இருந்த திருநங்கை இன்னும் சில நாட்களில் மருத்துவராக தனது சேவையை தொடரவுள்ளார். மருத்துவராக இருந்து திருநங்கையாக மாறியதால் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு ஆதரவின்றி நின்றபோது கைகொடுத்து ஊக்கமும், உதவியும் செய்த காவல் ஆய்வாளர் கவிதாவின் செயல் ஈடு செய்ய முடியாதது.

கணினி மயமான இந்த காலகட்டத்தில் பாலின வேறுபாடுகளை காரணம் காட்டி பணியிடங்களிலும், குடும்பங்களிலும் திருநங்கைகளை ஒதுக்கி வைக்கும் போக்கு மாற வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.

https://www.facebook.com/1635930103378724/posts/2464401563864903/