ரயில் பயணம், மாதிரிப்படம் pt web
தமிழ்நாடு

வடமாநிலங்கள் போல மாறுகின்றனவா தமிழ்நாட்டு ரயில் பயணங்கள்? மக்கள் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?

முன்பதிவு ரயில் பெட்டிகளில், முன்பதிவில்லா பயணிகள் ஏறுவதால், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படுகிறது. வடமாநிலத்தில் நிகழ்வதைப் போல் தமிழக ரயில்களில் நடக்கும் அத்துமீறல்கள் மற்றும் ஆபத்துகளை பார்க்கலாம்.

PT WEB

நீண்டதூர ரயில் பயணங்கள் ஒரு சுகமான அனுபவம். இதற்காக, முன்பதிவு செய்து செல்லும் பயணம் மற்றும் அதற்கான திட்டமிடலை அடியோடு நிறுத்திவிடுகிறது திடீரென ரயிலில் ஏறி நிரப்பும் கூட்டம். டாக்கா ரயிலும், பீகார் ரயில்களும் நிரம்பி வழியும் காட்சிகளை பார்த்திருப்போம். இதுபோன்ற நெருக்கடிகளில் பயணிக்க முடியாது என்பதால், தனக்கான இருக்கையை முன்பதிவு செய்வதை பயணிகள் விரும்புகின்றனர்.

ஆனால், அண்மைக்காலமாக, தமிழகத்தில் ஓடும் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் இருக்கைகளை, முன்பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமித்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பயணச் சீட்டு எடுக்காதவர்களும் கூட, முன்பதிவு பெட்டிகளில் அதிகாரத் தோரணையில் ஏறி அமர்ந்துகொண்டு மிரட்டும் காட்சிகள் பயணிகளை அச்சப்பட வைத்துள்ளன.

அண்மையில், சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயிலில் முன்பதிவு செய்யாத பயணச் சீட்டு வைத்திருந்த பலர், முன்பதிவு பெட்டிகளில் ஏறியது சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால், குழந்தைகளுடன் குடும்பமாக செல்வோரும், பெண்கள், முதியோர் உள்ளிட்ட முன்பதிவு பயணிகள் பெரும் அவதிக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகினர். இதனால் ரயில் பயணம் பாதுகாப்பு இல்லாததாக மாறியுள்ளது என முன்பதிவு செய்த பயணிகள் வலைதள பக்கங்களில் வேதனையை பதிவு செய்தனர். இந்த போக்கை மாற்ற வேண்டும் என்கின்றனர் ரயில் பயணிகள் சங்கத்தினர்.

ரயில்வே நிர்வாகம், பயணச் சீட்டு பரிசோதகர், ரயில்வே காவல்துறை உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து உரிய தீர்வு காண வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். உரிய பயணச்சீட்டு இல்லாமல், முன்பதிவு பெட்டியில் ஏறும் பயணிகளால் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும்... குழந்தை திருட்டு நடக்கும்... பெண்கள், முதியோருக்கு பாதுகாப்பு இருக்காது என பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கூட்டம் அதிகமுள்ள வழித்தடங்களில், முழுவதும் முன்பதிவில்லாத ரயில்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழக ரயில்களில், உரிய பயணச்சீட்டு இல்லாமல் ஏறி அமர்ந்துகொண்டு அட்டூழியம் செய்வது வடமாநில பயணிகள்தான் என்கின்றனர் பாதிக்கப்பட்ட சில பயணிகள். எதுவாகினும் எவராகினும் விரைந்து அவற்றை கண்டறிந்து, கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே ரயில்பயணிகள் கோரிக்கை..!