செல்போன் திருடும் மர்ம நபர் புதியதலைமுறை
தமிழ்நாடு

கடையை திறக்க வந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உடைக்கப்ப்ட்ட ஷட்டர்.. திருடப்பட்ட போன்கள்!

செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து 7 செல்போன், உதிரி பாகங்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்.. காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.

PT WEB

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியை சேர்ந்தவர் கவின். இவர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டியில் அமைந்துள்ள வாரச்சந்தை எதிரே, செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடையை வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், காலையில் கடையை திறப்பதற்காக வந்து பார்த்துள்ளார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார்.

தொடர்ந்து, கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் உள்ள ஷட்டர் உடைக்கப்பட்டு, விலையுயர்ந்த 7 செல்போன்கள், உதிரி பாகங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் தனது கடைக்குள் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது, “ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழையும் மர்ம நபர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய செல்போன்களை திருடுவதோடு, பணப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் கவின் புகார் அளித்ததின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையே புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த வாரத்தில் ஒரே இரவில் பூட்டி இருந்த ஆறு வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.