Minister L.Murugan pt desk
தமிழ்நாடு

“காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது” – என்கவுண்டர் குறித்து அமைச்சர் எல்.முருகன் கருத்து

“நெல்லையில் இளைஞர் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரம் கண்டனத்திற்கு உரியது. இந்த விவகாரத்தை காவல்துறை முறையாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை டவுன் பகுதியில் நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் எல்.முருகன் செய்தியாளார்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்...

தொடரும் என்கவுண்டர்கள் குறித்து...

தமிழகத்தில் நடைபெறும் தொடர் என்கவுண்டர்களை வழக்கறிஞர் என்ற முறையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டம், நீதித்துறை உள்ளிட்டவைகள் இருக்கும் போது காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது.

ரவுடி சீசிங் ராஜா

என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளிகள் கிடையாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். காவல்துறை என்கவுண்டர் மூலம் சட்டத்தை கையில் எடுத்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.

விசிக-வின் மது ஒழிப்பு கோரிக்கை குறித்து...

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தெரிவித்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக கூட்டணி நிலைக்காது என ஏற்கனவே சொல்லிவிட்டேன். திமுக கூட்டணியில் இருந்து அடித்துக் கொண்டு தானாக வெளியேறுவார்கள். திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் பெரிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை. இது போன்ற கேள்விகள் எழக்கூடாது என முதல்வரும் திருமாவளவனும் சேர்ந்து மக்களை திசை திருப்பும் நோக்கில் நாடகம் நடத்துகின்றனர்.

தி.நகரில் பூணூல் அறுக்கப்பட்டது குறித்து...

தியாகராய நகரில் இளைஞரின் பூணூலை அறுத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. வீட்டிலிருந்து கோவிலுக்குச் சென்ற நபரின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை முறையாக விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தமிழகத்திற்கான நிதி பகிர்வு குறித்து...

மத்திய அரசின் மூலம் வழங்கப்படக் கூடிய நிதி தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எந்த பாக்கியும் இல்லை என நிதி அமைச்சரே தெரிவித்துவிட்டார். பிரதமரை முதலமைச்சர் சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை” என்று தெரிவித்தார்.