கையெறி குண்டுகளை வீசுவதற்காக துப்பாக்கியில் பொருத்தி பயன்படுத்தும் புதிய ரக ஆயுதம், திருச்சியில் உள்ள படைக்கலத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏ.கே.47 உள்ளிட்ட பல்வேறு துப்பாக்கிகளில் எளிதில் பொருத்தும் வகையில் யூ.பி.ஜி.எல். என்ற புதிய ரக ஆயுதம் வடிவமைக்கப் பட்டுளளது. நாற்பதுக்கு நாற்பத்தாறு மில்லி மீட்டர் என்ற அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆயுதத்தை, முப்படைகளில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்த முடியும். ஏற்கனவே பயன்படுத்தும் துப்பாக்கிகளுடன் இதை இணைத்து கூடுதல் குண்டுகளை வெடிக்கச் செய்ய முடியும். இலக்கை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்கி அழிக்கும் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியும். இந்த புதிய ரக ஆயுதத்தை ஆலையின் பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், காலாட்படை, சிறப்பு படையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான போர்முறைகள் ஆகியவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார். UNDER BARREL GRENADE LAUNCHER என்ற இந்த ஆயுதத்தை 400 மீட்டர் தூரம் வரை பயன்படுத்த முடியும். இது 1.6 கிலோ கிராம் எடை கொண்டது.
மேலும் சிப்பாய் ஒருவர் TAR/AK - 47 தோட்டாவை பயன்படுத்துவதன் மூலமும், கையெறி குண்டுகளை வீசுவதன் மூலமும், எதிரிப் படையினரை அழிக்கவும், முன்னேறாமல் தடுக்கவும் முடியும். இந்த ஆயுதத்தை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் TAR/AK - 47 துப்பாக்கியுடன் இணைக்கவும், பிரிக்கவும் முடியும். - பிருந்தா