வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த அருள் என்பவருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர், பேரணாம்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு, ஆட்டோவில் மாலை வீட்டிற்கு வந்தபோது, மாணவனுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தக் கசிவு இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாய், உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவினிடம் விசாரிக்கையில், ஆசிரியைதான் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து விவகாரம் குறித்து மாணவனின் பெற்றோர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மாணவனுக்கு மூக்கில் ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மாணவனின் தாயார், “ஏற்கெனவே அந்த பள்ளியில் இருக்கும் ஆசிரியை, என் மகனை அடித்துள்ளார். அவன் நன்றாகத்தான் எழுதுகிறான். எதுவும் பிரச்னை என்றால் அடிக்காமல் என்னிடம் கூறும்படி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தேன். ஆனாலும் இதுபோன்று தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.