தொட்டில் கட்டி பிரசவத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

உடுமலை: “சாலை இல்லைன்னா தேர்தலை புறக்கணிப்போம்” - கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்; பொங்கியெழுந்த மக்கள்!

உடுமலை அருகே குளிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மக்கள் - சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Kaleel Rahman, webteam

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக மலைப்பகுதியில் 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் குருமலை, மாவடப்பு, ஈசல்திட்டு, குளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையான பாதை வசதி இல்லாததால் அங்குள்ள மக்களெல்லாம் அவசர மருத்துவ தேவைகள் உள்ளிட்டவற்றுக்கு அடர்ந்த காட்டுப்பாதை வழியாக சென்றுவருகின்றனர். இதனால் அவசர தேவைக்கு உடுமலைக்கு சென்று வரகூட மலைவாழ் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

கர்ப்பிணி பெண்

இதில் அண்மை சம்பவமாக குளிப்பட்டி செட்டில்மெண்ட் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இன்று உயிருக்கு போராடியுள்ளார். சாலை வசதி இல்லாத காரணத்தால் உடனடியாக அவரை தொட்டில் கட்டி கரடு முரடான வனப்பகுதியில் சுமந்து வந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அக்கிராம மக்கள்.

இதையடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களது அடிப்படை தேவையான சாலை வசதியை செய்து தருவதில்லை எனக் கூறிய மலைவாழ் கிராம மக்கள், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டி சுமந்து வரும் வழியில் வீடியோ ஒன்றை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

2006 வன உரிமைச் சட்டப்படி ஒரு ஹெக்டர் நிலம் ஒதுக்கி திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு சாலை அமைத்தால், அரைமணி நேரத்தில் திருமூர்த்தி மலைக்கு வந்தடைய முடியும். இதன்கீழ் சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கர்ப்பிணி பெண்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைத்துத் தர வேண்டுமென மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு இந்த மலைவாழ் மக்கள் இரு நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வனத்துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் மலைவாழ் மக்களுக்கு சட்டப்படி சாலை அமைப்பதற்கு முயற்சி எடுத்து வன உரிமை சட்டப்படி சாலை அமைத்தால் மட்டுமே மலைவாழ் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும். மேலும் அப்போது மட்டுமே மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வியும் கிடைக்கும். போலவே வனப்பகுதியில் குற்றங்கள் ஏற்பட்டால் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தடுக்கவும் முடியும். எனவே விரைவாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.