தமிழ்நாடு

ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம்

ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம்

webteam

ஆணவப் படுகொலையால் தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா தற்போது சுயமரியாதை மறுமணம் செய்துகொண்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கவுசல்யா, சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால், கவுசல்யாவின் பெற்றோர் சங்கரை ஆணவப் படுகொலை செய்தனர். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தமிழகத்தையே உலுக்கியது. பல அரசியல் தலைவர்களும் இந்த ஆணவப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போது கவுசல்யாவும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

இதையடுத்து கவுசல்யாவின் அப்பா, அம்மா உள்பட 11 மீது வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டையும் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த தண்டனை எதிர்த்து கவுசல்யாவின் பெற்றோர் தரப்பு செய்துள்ள மேல்முறையீடு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கவுசல்யா முற்றிலும் மாறுபட்டு, ஒரு சமூகப் புரட்சிப் பெண்ணாக உருவெடுத்துள்ளார். தொடர்ந்து ஆணவப் படுகொலைக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் கோவையை சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை கவுசல்யா சுயமரியாதை மறுமணம் செய்துள்ளார். கோவையில் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. சக்தி என்பவர் கவுசல்யாவுடன் நீண்ட நாட்களாக சமூகப் பணிகளில் இணைந்து பணியாற்றி வந்தவர். மறுமணத்தின்போது இருவரும் உறுதிமொழியேற்று மாலை அணிவித்துக்கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து கவுசல்யா தனது கணவர் சக்தியுடன் இணைந்து பறை இசைத்து நடனமாடினார்.