நீட் ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கில் மாணவர் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனுவை அவரின் வயது மற்றும் மனநலப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஜாமின் மனுவாக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த முந்தைய நீதிபதி, மனுதாரர் சிபிசிஐடி முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க அறிவுறுத்தினார். அவ்வாறு ஆஜரானால் உதித் சூர்யாவின் முன் ஜாமின் மனுவை, ஜாமின் மனுவாக விசாரிக்க தயார் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஜாமின் வழங்குமாறு கோரப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி மாணவர் அன்றே சிபிசிஐடி முன்பு ஆஜராகியிருந்தால் ஜாமின் மனுவாக விசாரிக்கலாம் ஆனால் மாணவர் சரணடையவில்லை என தெரிவித்தார். மாணவரின் பிரச்சனைக்கு அவரது தந்தையே காரணம் எனக்கூறிய நீதிபதி, மாணவரின் வயது மற்றும் மனநலப்பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜாமின் மனுவாக விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.