தமிழ்நாடு

”எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது” - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

”எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது” - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

webteam

தனக்கோ, தன் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மற்றும் அதிமுக அரசுகளின் மக்கள் விரோத போக்குகளையும் ஊழல்களையும் குறித்து நான் பேசும்போது விவாதப்பொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததை விவாதிக்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது இதைப்பிடித்துக்கொண்டு கயிறுத்திரிப்பதை பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் கழகத்திற்கு எதிராக திருப்பும் சதிவேலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விஷயத்தை இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன். எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்கு அந்த உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப்படங்கள் உள்ளன. மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான சில முடிவுகள் எடுக்கும்போது அங்குருக்கும் மூதாதையர்களின் புகைப்படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டு செல்வது வழக்கம்.

பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா பிள்ளையார் சிலை ஒன்றை வாங்கியிருந்தார். அதைப்பார்த்த என் மகள் இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார். களிமண்ணில் செய்வார்கள் என்று கூறினேன். தண்ணீரில் கரைத்து விடுவார்கள் என்று கூறினேன். ஏன் என்ற மகளின் கேள்விக்கு அதுதான் முறை என்கிறார்கள் என்றேன். அதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டார். அவரின் விருப்பத்தின்பேரில் நான்தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன். அவர் விருப்பத்தின்பேரிலேயே டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். அவ்வளவே” எனத் தெரிவித்துள்ளார்.