இபிஎஸ் - உதயநிதி முகநூல்
தமிழ்நாடு

“தண்ணீர் நிக்காம இருக்குல்ல..” எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்க்கு துணை முதல்வர் உதயநிதி பதில்!

சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாட பழனிசாமி வலியுறுத்தி இருந்தநிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாட பழனிசாமி வலியுறுத்தி இருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அக்டோபர் 16 ஆம் தேதி ரெட் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து தெரிவித்த பதிவில், ”இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, எங்களது ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் தரமான உணவை வழங்க உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்னும் உணவு வழங்கப்படவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுவதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. எனவே, உனடியாக அவர்களுக்கு உணவு வழங்க வலியுறுத்துகிறேன்.

அதேபோல், சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன? என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலிறுத்துகிறேன்.

ஸ்டாலினின் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். எனவே, ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்றிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள துணை முதலமைச்சர் ஸ்டாலின்,

“நேற்று இரவு சென்னையில் மிக அதிக கனமழை பெய்தது. தமிழக முதலமைச்சரின் ஆய்வுக்கு பிறகு அனைத்து அதிகாரிகளும் களத்தில் இறங்கி மக்களுக்கு என்ன தேவையோ, எந்த பாதிப்புகளும் வராதபடி எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கிறோம்.

இன்றும் மழை வரும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை லேசான மழைதான் பெய்துள்ளது. அதி கனமழை பெய்தாலும், அதையும் எதிர்க்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தண்ணீர் நிற்காமல் இருக்கிறதல்லவா.... அதுதான் வெள்ளை அறிக்கை”

என்று தெரிவித்துள்ளார்.