‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு தமிழ்நாடு அரசின், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மைதானத்தில் ‘அயலகத் தமிழர் மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி அங்கு நடைபெற்ற கண்காட்சியினை துவங்கிவைத்தார்.
இன்றும் நாளையும் (ஜனவரி 11, 12) நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட மொத்தம் 58 நாடுகளைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினர் பங்கேற்கின்றனர்.
ஜனவரி 12-ல் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. அயல்நாடுகளில் வாழும் தமிழர் பெருமக்களை ஒன்றினைக்கும் நாளாக இந்நாள் பார்க்கப்படுகிறது.
இத்தினத்தை ஒட்டி நடத்தப்படும் இம்மாநாட்டில் 218 சர்வதேவ தமிழ் சங்கங்கள் மற்றும் 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு பல கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயலகத் தமிழர் தினம் குறித்தும், மாநாடு குறித்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி, “உலகெங்கும் வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக கழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ள ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ஐ சென்னையில் இன்று தொடங்கி வைத்தோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உயிராக நேசித்த ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லை கருப்பொருளாக கொண்டு நடைபெறும் இந்த 2 நாள் நிகழ்வில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து அமைச்சர்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொழில்முனைவோர்கள் என அயலகத்தமிழர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழக அரசு என்றும் திகழும் என தாய்த்தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள அயலகத் தமிழர்களிடையே உரையாற்றினோம்” என்றுள்ளார்.