வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில்...
இந்த மாநாடு வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில், எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றியைத் தேடித்தரும் மாநாடாக அமையும். கடந்த. 1973-ல் அதிமுக-வை தொடங்கிய போது, மக்கள் மத்தியில் இருந்த எழுச்சி இன்றுவரை இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மக்களுக்குச் செய்த திட்டத்தினால் தான் 74 நாட்களில் 1.64 கோடி பேர் இயக்கத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.
இன்றைக்கும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பார். அவர், சினிமாவில் வேண்டுமானால் மாமன்னனாக இருக்கலாம். ஆனால், அரசியலில் மாமன்னனாக இருக்க முடியாது. மதுரைக்கு கலைஞர் இதுவரை எந்த திட்டமும் கொண்டு வரவில்லை குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏ.வ.வேலு பேசி இருக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பிச்சை என்றெல்லாம் பேசக்கூடாது.
மதுரையை பொறுத்த வரை திமுக அரசு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. கேட்காமலேயே மதுரையின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா” என்றவரிடம் மாமன்னன் படம் பார்த்தீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நான் இன்னும் பார்க்கவில்லை ஐயா ஏன் எல்லோரும் அதையே கேக்குறீங்க உங்களுக்காகவே படம் பாக்கணும் போல இருக்கு என்றார்.