கோடநாடு வழக்கில் சயான், மனோஜ் ஆகியோர் ஜனவரி 29 ஆம் தேதி நேரில் ஆஜராக உதகை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி சென்ற மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆனால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து நிபந்தனைகளின் அடிப்படையில் இருவரையும் விடுவித்தார். அத்துடன் கடந்த 18ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் உத்தரவிட்டார்.
அதன்படி, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு கோரினார். ஜாமீன் வழங்க வேண்டுமென்றால் ஜாமீன் உத்தரவாதம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதம் இரண்டையும் நீதிமன்றத்தில் சமர்பித்ததால், இருவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருவதால் சயான் மற்றும் மனோஜின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய சயான் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சயான், மனோஜ் ஆகியோர் ஜனவரி 29 ஆம் தேதி நேரில் ஆஜராக உதகை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.