ஊரடங்கையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார் அத்தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றதிலிருந்து தொடர்ச்சியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு கொரோனா கால ஊரடங்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
உணவு வழங்குதல், தடுப்பூசி திட்டம், மளிகைப் பொருட்கள் வழங்குதல் என தொகுதி முழுக்க சுழன்று வருகிறார். இந்நிலையில், இன்று பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் குருக்கள்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரானா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.