தமிழ்நாடு

டெல்லியில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி! பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்!

டெல்லியில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி! பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்!

webteam

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். புதுடெல்லியில் உள்ள பிரதமருடைய இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 04:30 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை காலை விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். முதலமைச்சர் முக.ஸ்டாலின் அமைச்சரவையில் இணைந்த பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற உள்ள இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதில், தமிழ்நாடு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை மாலை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் கலந்து கொள்கிறார். முன்பு தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். முதலமைச்சர் குடும்பம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொள்கிறார் என திமுக தலைவர்கள் தெரிவித்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியும் டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ரவி ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டு டில்லி வந்தடைந்தார்.

உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரையும் சந்திப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை உதயநிதி ஸ்டாலினை டில்லி தமிழ் சங்கம், டில்லி முத்தமிழ் பேரவை பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார். டில்லி தமிழ் கல்விக் கழக ஆசிரியர்களுடன் உதயநிதி சந்திப்பு நடத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தார். டில்லியில் பணியாற்றும் அனைத்து இந்திய அரசுப்பணி தமிழ்நாடு பிரிவு அதிகாரிகளையும் அவர் சந்திப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.