கோவை கோயிலில் பிரசாதமாக தரப்பட்ட அவலை சாப்பிட்டு இருவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோயில் ஒன்றில் நேற்று நடைபெற்ற திருவிழாவில், பக்தர்களுக்கு பிரசாதமாக அவல் வழங்கப்பட்டது. இதை வாங்கி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு, வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஏன் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது என விசாரித்தனர்.
விசாரணையில் கோயிலில் பக்தர்கள் விளக்கேற்றிவிட்டுச் சென்ற நெய்யைக் கொண்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கபட்டது. இந்நிலையில் சாவித்திரி (60), லோகநாயகி (62) ஆகிய இரண்டு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடாது என்பதால், பிரசாதம் சாப்பிட்ட அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரசாதம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.