உயிரிழந்த மோகன் pt desk
தமிழ்நாடு

மாங்காடு: மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து - தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

மாங்காடு அருகே மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி, திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (45). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே சென்ற போது சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

Cows

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த மோகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார் இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோகன்

கடந்த வாரம்தான் மாடு மோதியதில் பெண்ணொருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒருவர் மாட்டினால் உயிரிழந்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.