தமிழ்நாடு

பொள்ளாச்சியில் 2 புலிகள் மர்ம மரணம் : விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்..!

webteam

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு 20க்கும் மேற்பட்ட புலிகள் வனத்துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அருகே உள்ள சர்க்கார்பதி வன எல்லையை ஒட்டியுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் புகுந்த புலி ஒன்று அங்கிருந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றது. இந்த புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து முயற்சி செய்தனர்.

ஆனால் கூண்டில் சிக்காமல் சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த புலி மாயமானது. நேற்று மாலை சேத்துமடை அருகேயுள்ள போத்தமடை மற்றும் புங்கன் ஓடை பகுதியில் ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர், ஆண் மற்றும் பெண் புலிகள் 2 அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் கொடுத்த வனத்துறையினர் புலிகள் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு புலிகளின் உடல்களிலும் பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் புலிகளுக்கு விஷம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வன எல்லையை ஒட்டியுள்ள விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் இரண்டு புலிகளுக்கும் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.

உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு புலிகளின் இறப்பு குறித்து தகவல் கிடைத்த உடன் விசாரணை தீவிரம் அடையும் என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு புலிகள் உயிரிழந்துள்ள சம்பவத்தால் புலிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.