தண்டவாளம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சேலம்: செல்போனில் கேம் விளையாடியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு பள்ளி மாணவர்கள்.. நேர்ந்த துயரம்!

ஆத்தூர் அருகே கேம் விளையாடிக் கொண்டே தண்டவாளத்தை கடக்கும் முயன்ற இரண்டு பள்ளி மாணவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் தினேஷ் மற்றும் ரவிக்குமார் என்பவரது மகன் அரவிந்த் ஆகிய இருவரும் ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நண்பர்களாகிய இருவரும், நேற்று விடுமுறை தினம் என்பதால் வெளியே சென்று விட்டு மீண்டும் தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

இரு பள்ளி மாணவர்கள் பலி

அப்போது இருவரும் செல்போனில் கேம் விளையாடி கொண்டே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் சேலத்திலிருந்து விருதாச்சலம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பள்ளி மாணவர்கள் மீது மோதியுள்ளது. இதில் குமாரின் மகன் தினேஷ் நிகழ்டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த ரவிக்குமார் மகன் அரவிந்தை மீட்டு அப்பகுதியினர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரவிந்த்தும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.