தமிழ்நாடு

நீண்ட நாள் கனவு சேமிப்பை நிவாரணமாக கொடுத்த மழலைகள்

நீண்ட நாள் கனவு சேமிப்பை நிவாரணமாக கொடுத்த மழலைகள்

webteam

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை புதிய தலைமுறை தொலைக்காட்சி மூலம் பார்த்த பள்ளி மழலைகள் தங்கள் உண்டியல் பணத்தை நி‌வாரண உதவியாக வழங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராமேஷ் என்பவரது மழலைகள் திபிஷாஸ்ரீ, திபிஷன். இவர்கள் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது. இதற்கான பணத்திற்காக தினமும் பள்ளிக்கு செல்லும்போது பெற்றோர் கொடுக்கும் சிறு சிறு பணமான, பத்து ரூபாய் ஐந்து ரூபாயை உண்டியல் மூலம் சேர்த்து வைத்திருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தந்தையுடன் டி.வி. பார்த்து கொண்டிருந்த போது தற்போது டெல்டா மாவட்டங்களில் கஜா புயலல் பாதிப்பு காரணமாக அப்பகுதி விவசாயிகள், பெண்கள் மற்றும் பள்ளி மழலைகள் என அனைவரும் வீடுகளை இழந்ததை கண்டுள்ளனர். 

மக்கள் குடிநீர் கூட இல்லாமல் அழுது கொண்டிருப்பதை புதிய தலைமுறை தொலைக்காட்சி மூலம் பார்த்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அந்த மழலைகள் எண்ணியுள்ளனர். அதற்காக இருவரும் விமானத்தில் செல்வதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கலாம் என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி நிவாரணத் தொகை எப்படி வழங்குவது எங்கு வழங்க வேண்டும் எனவும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, இரு மழலைகளும் தங்கள் தந்தை உதவியுடன் புதிய தலைமுறை தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு நிவாரணத்தை அளித்தனர். நீண்ட நாள் கனவாக்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த சுமார் 1250 ரூபாய் பணத்தை புயல் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண நிதியாக மழலைகள் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.