தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: வெள்ளத்தில் சிக்கித்தவித்த கர்ப்பிணிகள் பத்திரமாக மீட்பு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: வெள்ளத்தில் சிக்கித்தவித்த கர்ப்பிணிகள் பத்திரமாக மீட்பு

webteam

மணிமங்கலத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த இரண்டு கர்ப்பிணிகள் புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் வெள்ள பாதிப்புகள் குறித்து புதிய தலைமுறை களத்தில் இருந்து செய்தி வெளியிட்டது. அப்போது அங்குள்ள லட்சுமி நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு கர்ப்பிணிகள் வெளியேற முடியாமல் தவிப்பதாக தெரியவந்தது. அவர்களின் வேதனையையும் மருத்துவ உதவி பெறமுடியாத சூழலையும் தெரியப்படுத்தினர். உடனடியாக அந்த தகவல், எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள பாதிப்புகளின் மீட்புப்பணிக்கான பொறுப்பு அதிகாரி அமுதா, மணிமங்கலத்திற்கு அனுப்பப்பட்டார். அரைமணிநேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு அமுதா தலைமையிலான குழு விரைந்தது. இரண்டு மருத்துவர்கள், காவல்துறையினர் அடங்கிய குழு பரிசலுடன் அங்கு சென்று சேர்ந்தது. இதையடுத்து அங்கேயே இரண்டு கர்ப்பிணிகளுக்கும் முதல்கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் கர்ப்பிணிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பத்திரமாக பரிசல் மூலம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கூடுவாஞ்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து பாதுகாப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் பின்னர் அவர்கள் விரும்பியபடி கர்ப்பிணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தெரிவித்துள்ளார். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து 4 நாட்களாக தவித்து வந்த இரண்டு கர்ப்பிணிகள் அச்சத்தில் இருந்து விடுபட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.