தமிழ்நாடு

கோவை: காலில் விழுந்த விவகாரம் - விஏஓ, உதவியாளர் சஸ்பெண்ட்

கோவை: காலில் விழுந்த விவகாரம் - விஏஓ, உதவியாளர் சஸ்பெண்ட்

JustinDurai
கோவையில் மனு அளிக்க வந்தவரின் காலில் விழுந்து கிராம நிர்வாக உதவியாளர் மன்னிப்புக் கேட்டது தொடர்பான விசாரணையில் பொய்யான தகவலை அளித்ததாகக்கூறி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபால்சாமி என்பவர் காலில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி என்பவர் விழும் வீடியோ கடந்த 7 ஆம் தேதி இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோபால்சாமி மீது, பட்டியிலனத்தை சேர்ந்த முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாகக்கூறி நான்கு பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் விவசாயியான கோபால்சாமி தனது நிலப்பிரச்சனை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி கொண்டிருந்தபோது அலுவலக உதவியாளர் முத்துசாமிதான் திடீரென கோபால்சாமியை கன்னத்தில் பலமாக அறைந்து கீழே தள்ளியதாகவும், முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கோபால்சாமி கூறவே இல்லை என அவரது தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.
தனது செயல் படமெடுக்கப்பட்டது தெரிந்ததும், முத்துசாமி நாடகமாடி கோபால்சாமி காலில் விழுந்ததாகவும் தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின. இந்த விவகாரத்தை வேண்டுமென்று திட்டமிட்டு சாதிரீதியாக முத்துசாமி தவறாக சித்தரித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் விசாரணையின்போது பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காகவும், மனு கொடுக்க வந்த கோபால்சாமியை அடித்ததற்காகவும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் கிராம உதவியாளர் முத்துச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, அன்னூர் காவல் நிலையத்தில் கிராம உதவியாளர் முத்துசாமி மீது காயம் ஏற்படுத்துதல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.