கோவையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 2 பேருக்கு சம்மன் அளித்துள்ளனர். சதாம் உசேன், முகமது யாசிர் ஆகிய இருவரும் கொச்சி என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, கோவை உக்கடம் ஜிஎம் நகரில் வசிக்கும் உமர் ஃபாரூக், சதாம் உசேன் ஆகியோரின் வீடுகளிலும், கோட்டைமேட்டில் உள்ள ஜனோஃபர் அலி, தமிஷா முபின் என்பவர்களின் இல்லங்களிலும் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், பிலால் எஸ்டேட் பகுதியில் முகமது யாசிர் என்பவரின் வீட்டிலும் சோதனையை நடத்திய அதிகாரிகள், 5 பேரையும் பந்தய சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள், பின்னர் 5 இளைஞர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சதாம் உசேன், முகமது யாசிர் ஆகிய இருவரை மட்டும் இன்று கொச்சியில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், இந்த 5 பேரின் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கையில் இருந்து வந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.