வந்தே பாரத் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழகத்திற்கு மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவை..எங்கு, எவ்வளவு கட்டணம் தெரியுமா?

தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

PT WEB

தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும் புதிதாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

புதிய வந்தே பாரத் ரயில் சேவையில், சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் ரயில், நாகர்கோவிலை பிற்பகல் 1.50 மணியளவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சாதாரண வகுப்பில் ஆயிரத்து 760 ரூபாயும், உயர் வகுப்பில் மூன்றாயிரத்து 240 ரூபாயும் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பகல் 1 மணிக்கு பெங்களூரு செல்கிறது.

மறுமார்க்கத்தில் பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.55 மணிக்கு மதுரை வந்தடையும். செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரயிலில், மதுரையில் இருந்து பெங்களூருக்கு சாதாரண வகுப்பில் ஆயிரத்து 575 ரூபாயும், உயர் வகுப்பில் இரண்டாயிரத்து 865 ரூபாயும் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூருவிற்கு கூடுதல் ரயில் இயக்கப்படுவதால் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.