அதிகாரிகள் சோதனை pt web
தமிழ்நாடு

நாமக்கல் - ஹோட்டலில் வாங்கப்பட்ட சிக்கன் ரைஸ்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவர் அனுமதி

நாமக்கல் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சாப்பிட்ட 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். 2 பேரிடம் விசாரணை நடைபெறும் நிலையில் ஹோட்டலுக்கு சீல் வைத்து ஆட்சியர் நடவடிக்கை

PT WEB

செய்தியாளர் எம்.துரைசாமி

நாமக்கல் கொசவம்பட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர் பகவதி (20). இவர் நாமக்கல் அருகே உள்ள தனியார் பொறியல் கல்லூரியில் படித்துக் கொண்டு நாமக்கல்லில் உள்ள இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பகவதி நேற்று இரவு 7 மணி அளவில் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள கருணாநிதி ஹோட்டலில் 6 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். அதில் இரண்டை தனது தம்பி ஆதி (18) மூலம் தனது தாத்தா சண்முகநாதன் (72) அவர்கள் வசிக்கும் எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்திற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். மீதம் உள்ளதை அவரது அம்மாவிடம் கொடுத்துள்ளார்.

இரவு 8.30 மணி அளவில் பகவதியின் தாய் நதியா அந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டபோது அதில் வேறொரு வாடை தெரிந்தது. இதனைத்தொடர்ந்து அதனை சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டு நதியா தந்தைக்கு போன் செய்துள்ளார். அவர் ஏற்கெனவே அதனை சாப்பிட்டு உள்ளார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முகநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அதனைத்தொடர்ந்து நதியாவும் உடல் நலம் பாதிக்கப் பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த உணவகத்தை ஆய்வு செய்து உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரின் நிலை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்து, நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தையும் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்து மூட உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

உணவத்திற்கு சீல் வைத்த பின் ஆட்சியர் டாக்டர் உமா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஹோட்டலில் 6 சிக்கன் ரைஸ் பொட்டலங்களை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார் இளைஞர். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் இருவரும் தீவிரமான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்தோம். ஹோட்டலில் சாப்பிட்ட வேறு யாருக்கும் இதுவரை உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை.

சுகாதாரத்துறை மூலம் நாமக்கல் நகராட்சியில் இருக்கும் அத்தனை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டோம். இதுவரைக்கும் எங்கும் வாந்தி, பேதி போன்ற பிரச்னைகளுடன் நோயாளிகள் அனுமதி ஆகவில்லை. சிகிச்சை பெற வந்த இருவரும் ஆபத்தான நிலையிலேயேதான் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற பகவதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் வேறு ஏதாவது கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என ஆட்சியர் தெரிவித்தார்.