தஞ்சை மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் போலி சிலைகளை வைத்துவிட்டு, 6 சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில், மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன், பந்தநல்லூர் செயல் அலுவலர் காமராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோயில் செயல் அலுவலரான காமராஜ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மயிலாடுதுறை, நாகை, கும்பகோணம் பகுதிகளிலுள்ள 291 கோயில்கள், கஜேந்திரன் கட்டுப்பாட்டில் இருந்தன. கடந்த 5 ஆண்டுகளாக கஜேந்திரன் மயிலாடுதுறையிலேயே பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.