தமிழ்நாடு

வீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்!

வீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்!

webteam

(கொலை செய்யப்பட்ட தம்பதி)

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பியை கொன்று புதைத்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரின் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த செல்வராஜ், அழைப்பிதழை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தார். அந்த வரிசையில் வெள்ளக்கோயில் அருகே உள்ள உத்தண்குடகுமராவலசு கிராமத்தில் வசிக்கும், அக்கா கண்ணம்மாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க காரில் புறப்பட்டார் செல்வராஜ்.

அவருடன் மனைவி வசந்தாமணியும் சென்றிருக்கிறார். கண்ணம்மாவின் வீட்டிற்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கரூர் மதுரை புறவழிச்சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. காரில் இருந்த திருமண அழைப்பிதழை வைத்து விசாரணை மேற்கொண்டபோது, அது நிதிநிறுவன அதிபர் செல்வராஜின் கார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். 

செல்வராஜும் அவரின் மனைவியும் எங்கே சென்றார்கள்? காரை அங்கு விட்டுச் சென்றவர்கள் யார்? அந்த தம்பதியை யாரேனும் கடத்திவிட்டார்களா என பல்வேறு சந்தேகங்கள் எழவே, விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. அவர்கள் இறுதியாக சென்ற கண்ணம்மாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது, பின்புறம் அவர்கள் இருவரும் கொன்று புதைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் காவல்துறைக்கு தெரியவந்தது.

இதனால் கண்ணம்மாவிடம் தீவிர விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், இக்கொலையை செய்தது யார் என்ற கேள்விக்கு விடை தேடி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தம்பதி காணாமல் போன புகாரில், கண்ணம்மா  மற்றும் அவரது மருமகன் நாகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்