கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இடையேயான பிரச்னை ஒருகட்டத்தில் இருதரப்பினரின் பிரச்சனையாக மாறி 2 பேரும் தாக்கிக்கொண்டதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பனமடங்கி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 28-ம் தேதி இரவு சின்ன வடுங்கன்தாங்கள் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு தரப்பினரை, மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 தரப்பினரும் கொடுத்த புகாரையடுத்து கீழ்முட்டுகூர் கிராமத்தை சேர்ந்த தரணி, லலித்குமார், கோபி, விஷ்ணு, சக்திவேல் என இரண்டு தரப்பையும் சேர்ந்த 5 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
இதையடுத்து கீழ்மூட்டுகூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் முன்விரோதம் காரணமாக இன்று ஒருதரப்பை சேர்ந்த சம்பத் என்பவரின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இதில் வீடு தீ பற்றி எரிந்ததில், சம்பத்தின் கர்ப்பிணி மனைவி பாதிக்கப்பட்டு வடுங்கன்தாங்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல் துறை குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பனமடங்கி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.