தமிழ்நாடு

பிரபந்தம் பாடுவதில் போட்டி - வடகலை, தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம், கைகலப்பு

webteam

பிரபந்தம் பாடுவதில் போட்டி - வடகலை, தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம், கைகலப்புகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் தேவராஜ சுவாமி கோவிலில் இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது.

உற்சவத்தை ஒட்டி உற்சவர் தேவராஜசுவாமிக்கு சிறப்பு ஆராதனை, அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பூதத்தாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளினார். பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடைபெற்ற போது, உற்சவ மூர்த்திகள் முன்பு தென்கலை பிரிவினர் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர்.

அப்போது வடகலை பிரிவினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பிரபந்தங்களை பாடக்கூடாது என வாய் தகராறில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே கைகலப்பு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவலறிந்து வந்த போலீசார், காஞ்சிபுரம் தாசில்தார், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இருதரப்பினரும் பிரபந்தங்களை பாட வேண்டாம் என காவல் துறை, இந்து அறநிலையத் துறை, வருவாய் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டும் தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போட்டிபோட்டுக்கொண்டு இரு தரப்பு ஐயங்கார்களும் பிரபந்தங்களை ஆவேசமாக பாடி சுவாமிகளை வழிபட்டனர்.

பூதத்தாழ்வார் சாத்துமுறை மட்டுமின்றி ஒவ்வொரு ஆழ்வார்களின் சாத்துமுறை உற்சவத்தின் போதும் வடகலை தென்கலை பிரிவினரிடையே பிரபந்தங்கள் பாடுவதில் தகராறு ஏற்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது.

பிரசித்தி பெற்ற புகழை உடைய வரதராஜ பெருமாள் கோவிலில் வட, தென் கலை பிரிவினர் ஒவ்வொரு உற்சவத்தின் போதும் தொடர்ந்து தகராறில் ஈடுபடுவது பக்தர்களிடையே முகம் சுளிக்கும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.