தமிழ்நாடு

வகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்து இரண்டு பிள்ளைகள் பலத்த காயம்

வகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்து இரண்டு பிள்ளைகள் பலத்த காயம்

webteam

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி நடுநிலை பள்ளியில் மின்விசிறி விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் அரசும் அதிகாரிகளும் பெரும் அசம்பாவிதங்கள் நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம் ஒரு உதாரணம். அதன் பின்பும் கூட அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒரு அரசு பள்ளி.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி நடுநிலை பள்ளியில் மின்விசிறி விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின்பும் கூட சுதாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தொடர்ந்து அதே பள்ளி அறையில் வகுப்புகளை நடத்தி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள அனைத்து ‌கட்டடங்களும் மிகவும் மோசமானதாக உள்ளது. இது பற்றி பலமுறை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் புகார் செய்தும் பலனில்லை. 

இந்நிலையில் நேற்று மதியம் 7ஆம் வகுப்பு மாணவர்கள் பயின்று கொண்டிருக்கும் பொழுது கான்கிரீட் கட்டடத்தின் மேற்புற சுவர்  உடைந்தது  விழுந்தது. இதனால் மேலே சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறி மாணவர்கள் தலையில் விழுந்தது. அதில் விமல்ராஜ், ராமன் என்ற இரு மாணவர் பலத்த காயம் அடைந்தார். மற்றொரு மாணவர் சிறு காயம் அடைந்தார். உடனடியாக ஆசிரியர்கள் விரைந்து செயல்பட்டு பலத்த காயமடைந்த மாணவர்களை மருத்துமனையில் சேர்த்தனர். பின் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 

இந்நிலையில் சிதலமடைந்து மேற்கூரையின் சுவர் இடிந்து விழுந்த அதே பள்ளி கட்டடத்தில் இன்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் கட்டிட வசதி இல்லாததால் அக்கட்டிடத்தில் பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று ஆசிரியர் தரப்பில் கூறினாலும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை உணராமல் அதே கட்டடத்தில் வகுப்பது எடுப்பது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தற்பொழுது சேதத்திற்கு உள்ளான கட்டடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் அது தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் தற்போது சிதலமடைந்து விழுந்துள்ளதாகவும், மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களும் இதே போல்தான் சேதமடைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.