தமிழ்நாடு

நிர்மலா தேவி விவகாரத்தில் இருவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

நிர்மலா தேவி விவகாரத்தில் இருவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

Rasus

நிர்மலா தேவி விவகாரத்தில் சிறையில் உள்ள இரண்டு பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கல்லூரி மாணவிகளை தறவாக நடத்த முயன்ற வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியையான நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள மூவருக்கும் ஜாமீன் பலமுறை மறுக்கப்பட்டு வருகிறது.

கீழமை நீதிமன்றங்களை ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததையடுத்து முருகன் மற்றும் கருப்பசாமி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில் இருவருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் நிர்மலா தேவி இன்னும் சிறையில்தான் உள்ளார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட அழைத்துவரப்பட்டார்.  அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினர். அதற்கு, சி.பி.சி.ஐ.டி தன்னுடைய வாக்குமூலம் என நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தன்னை மிரட்டி வாங்கபட்ட பொய்யான வாக்குமூலம் எனவும் தனக்கு ஜாமீன் மறுப்பதில் உள்நோக்கம் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை பேசவிடாமல் போலீஸார் இழுத்துச் சென்றதால் அவர் அதிகமாக தடுமாறியது குறிப்பிடத்தக்கது.