தமிழ்நாடு

கை, கால்களை கடித்த காட்டுப்பன்றி - இரண்டு விவசாயிகள் படுகாயம்

கை, கால்களை கடித்த காட்டுப்பன்றி - இரண்டு விவசாயிகள் படுகாயம்

webteam

விருதுநகரில் காட்டுப்பன்றி கடித்ததில் படுகாயமடைந்த இரண்டு விவசாயிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி நரிக்குடி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயமே பிராதான தொழிலாக உள்ளது. தற்போது மழை பொழிவால் விவசாயம் நல்ல முறையில் நடந்தாலும், காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதாகவும், தங்களை தாக்குவதாகவும் விவசாயிகளை வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நரிக்குடி நாலூரைச் சேர்ந்த முத்துபாண்டி (25) மற்றும் ராஜ்குமார் (24) ஆகியோர், கண்மாய் வழியாக விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது புதர்பகுதியில் மறைந்திருந்த காட்டுப்பன்றி திடீரென இருவர் மீதும் பாய்ந்து தாக்கியது. இதில் கீழே விழுந்த முத்துப்பாண்டியின் கால்களை காட்டுப்பன்றி கடித்து குதறியது. 

முத்துப்பபாண்டியை கடித்து குதறிய காட்டுப்பன்றியை ராஜ்குமார் விரட்ட முயன்றபோது, அவரது கை விரலை கடித்துக் குதறியது. இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து, காட்டுப்பன்றியை விரட்டினர். பின்னர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.