தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இரு குடும்பத்தினர் தற்கொலை முயற்சி..!

webteam

நாமக்கல்லில் நிலப்பிரச்சனை மற்றும் வீட்டை மீட்டு தர கோரி இரண்டு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் பில்லிகல்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி அவரது தயார் கலாமணி மற்றும் கிருஷ்ணவேணியின் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா நிலத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், இதன் மீது பலமுறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியும் நாமக்கல் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

இதைப்பார்த்த பாதுகாப்பு பணி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அடுத்த பவித்திரம் பகுதியை சேர்ந்த ரமேஷ்காந்த் அடமானம் வைத்த தனது வீட்டை மீட்டு தரக்கோரி புகார் அளித்த நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மண்ணெண்ணை தற்கொலைக்கு முயன்றார். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.