பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் பகுதியில் உள்ள மலையில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் 100 பேருக்கும் மேல் தினமும் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. பணிசெய்யும் போது பாறை சரிந்து விழுந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கல்குவாரி அதிமுக பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் சிக்கி சுப்பரமணி, வினோத் என்ற இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் கவுள்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த இரண்டு பேரின் உடல்கள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் மணி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றார்.
பாறை சரிந்து விழுந்ததில் மேலும் நமச்சிவாயம் என்பவர் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த கல்குவாரி பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமானது என மருத்துவமனையில் இருந்த நபர் எஸ்.பியிடம் தெரிவிதத்தார்.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கல்குவாரி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தில் கனமவளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். தற்போதைக்கு முதல்கட்ட நடவடிக்கையாக சம்பவ இடமான கல்குவாரியில் நேரில் விசாரணை செய்த ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.