Insta பிரபலம், Mr World மணிகண்டன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | பல பெண்களை திருமணம் செய்து பணமோசடி.. Insta பிரபலம், Mr World மணிகண்டன் மீது வழக்குப்பதிவு!

பல பெண்களை திருமணம் செய்துகொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்குபதிவு. ஏற்கெனவே ஜாமினில் வெளிவந்திருந்த அவர் மீது மேலும் இரு வழக்கை பதிவு செய்தது காவல்துறை.

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்றவரும், இன்ஸ்டா பிரபலமுமான மணிகண்டன் சொந்தமாக அம்பத்தூரில் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். 2019-ல் கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்த மணிகண்டன், 2021-ல் சந்தியா என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகி பணமோசடியில் ஈடுபட்டதாக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் அவரை கைது செய்து அப்போதே சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். சந்தியா என்ற அந்தப்பெண் தன் புகாரில், ‘தன் ஜிம்மிற்கு வரும் பெண்களிடம் பேசிப்பழகி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் மணிகண்டன்’ என மணிகண்டன் மீது குற்றம்சாட்டி இருந்தார்.

குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மணிகண்டன்

இந்தப் புகாரில் சிறைக்கு சென்ற மணிகண்டனை, அவரது மனைவி கவிதா ஜாமீனில் எடுக்க லட்சக்கணக்கில் செலவு செய்துவந்தார். அவ்வபோது கடிதம் மூலமாகவும் தனது அன்பை சிறையிலிருந்த மணிகண்டனுக்கு வெளிப்படுத்தி வந்தார் கவிதா. இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் மணிகண்டன். பின் மீண்டும் தனது லீலைகளை காண்பிக்க தொடங்கியுள்ளார்.

இதில் சமீபத்தில் யூடியூப்பில் மணிகண்டன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அதில் வேறொரு பெண்ணை மணிகண்டன் தன் மனைவி என காண்பித்துள்ளார். அந்தக் காணொளியை கண்டு கவிதா அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக கவிதா மணிகண்டனிடம் கேட்டப்போது அவர் கவிதாவை மிரட்டி உள்ளார். இதையடுத்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது கவிதா புகார் அளித்தார். ஆனால் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தொடர்ச்சியாக கணவர் மணிகண்டன் கவிதாவிடம் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மணிகண்டன்

புகாரை வாபஸ் பெறும்படி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த கொடுமைகளின் காரணமாக மனமுடைந்த கவிதா, தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக அவர் உயிர்பிழைத்துள்ளார்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.)

குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மணிகண்டன்

மீண்டுவந்த கவிதா, வரதட்சணை கொடுமை மற்றும் வேறொரு திருமணம் செய்து மோசடி செய்தது என மணிகண்டன் மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் மீண்டும் புகார் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில் “என்னை காதலித்த மணிகண்டன் கடந்த 2019 ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் கோயிலில் என்னை திருமணம் செய்தார். அதன் பிறகு தொடர்ந்து நெருங்கி பழகி வந்தார். ஒருகட்டத்தில் இருவரின் பெற்றோர்களுக்கும் எங்களின் திருமணம் பற்றி தெரியவந்தது. அதன்பின் வெளிப்படையாக திருமண வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவு செய்தோம்.

குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மணிகண்டன்

ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண்ணுடன் அவர் நெருங்கி பழகியுள்ளார். அவர் மணிகண்டன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். நான் கொடுத்த வரதட்சணை பணத்தை பயன்படுத்தியே மணிகண்டன் வெளியில் வந்தார். நாங்கள் காதலிக்கும் போதே தனது உடற்பயிற்சி மையத்தில் சில பெண்களோடு நெருங்கி பழகி வந்தார் மணிகண்டன். அப்போதே பலரும் மணிகண்டனை பற்றி குற்றம் சாட்டினர். இருப்பினும் அவரை நம்பினேன்.

சிறைக்கு சென்று வந்த பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்டு சில மாதங்கள் முறையாக வாழ்ந்தார். ஆனால், திடீரென போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி என்னை அடிக்க ஆரம்பித்தார். முறையாக உடற்பயிற்சி மையத்தை கவனிக்காததால் அதையும் காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்பின் என் அம்மா வீட்டிற்கு வந்து மணிகண்டனை பிரிந்து வாழ்ந்தேன். மீண்டும் என்னோடு சேர்ந்து வாழுமாறு அடிக்கடி வீட்டிற்கு வந்து பேசினார் மணிகண்டன். தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகி, பல பெண்களோடு தொடர்பு வைத்திருந்ததார்.

குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மணிகண்டன்

இதற்கிடையே வேறொரு பணக்கார பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். எனக்கு உண்டான கடனை அடைப்பதற்கு அந்த திருமணத்தை பயன்படுத்திக்கொண்டுள்ளார்” என்றுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக போரூர் எஸ்ஆர்எம்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மணிகண்டன் மீது மிரட்டல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணிகண்டன் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

மேலும் தற்போது மணிகண்டன் திருமணம் செய்துக்கொண்டுள்ள அந்த பெண்ணும் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் கீழும் நான்கு பிரிவுகளில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிகண்டன் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

தன் மீது மேலும் இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளதை அறிந்து மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.