தூத்துக்குடி அருகே பாட்டிக்கு உணவு கொடுக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதியபுத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பூரணம் தனது மகன்களுடன் அப்பகுதியில் பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்தார்.
சிறுவர்களின் பாட்டி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாட்டிக்கு தினசரி சாப்பாடு கொடுப்பதற்காக சிறுவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து செல்வது வழக்கம். இதேபோல் நேற்று மதியமும் அவர்கள் 2 பேரும் பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சைக்கிளில் சென்றுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பும் வழியில் அருகில் இருந்த ஊருணிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கையில் சேற்றில் சிக்கி இரட்டையர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். அக்கம்பக்கத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் சிறுவர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாப்பாடு கொடுக்கச்சென்ற சிறுவர்கள் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதட்டம் அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை சந்தேகத்தின்பேரில் ஊருணிக்கு சென்று உறவினர்கள் தேடி பார்க்கையில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்த தகவல் புதியம்புத்தூர் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையின் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.