Arrested pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: பாஜக உட்கட்சி பூசல்... ஒருவர் மீது ஒருவர் புகார் - இருவர் கைது

சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக திண்டுக்கல் பாஜகவில் உட்கட்சி பிரச்னை. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் தனபால். இவர், கடந்த 14 ஆண்டுகளாக பா.ஜ.க ஒன்றிய செயலாளராகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஓபிசி அணி தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சாணார்பட்டி ஒன்றிய செயலாளராக இருந்து வந்த தனபாலை, கட்சியை விட்டு ஓரம்கட்டும் நோக்குடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கிழக்கு மாவட்ட தலைவர் தனபால்

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கக் கோரி சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் தனபால் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால், "பதிவிட்டவைகளை, நீக்காவிட்டால் கொலை செய்து விடுவேன்" என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் உடல் குறைபாடுகளை கூறி, கிழக்கு மாவட்ட தலைவர் தனபால், ஒன்றிய செயலாளர் தனபாலை இழிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் புகார் அளித்திருந்த நிலையில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திண்டுக்கல மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் புகார் அளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து மணிகண்டன் என்பவர், “திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தனபால் குறித்து சமூக வலைதளங்களில் ஒருவர் அவதூறாக பதிவிட்டார். அத்துடன் என்னை அடையாளம் தெரியாத 2 நபர்களுடன் சாணார்பட்டி அருகில் கத்தியைக் காட்டி மிரட்டினர்” என்று ஒன்றிய செயலாளர் தனபால் மீது புகார் அளித்தார்.

Police station

இதனையடுத்து இருதரப்பினரின் புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் தனபாலன், மணிகண்டன் மற்றும் சாணார்பட்டி தனபால் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று மாலை வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த பாஜக ஒனறிய செயலாளர் தனபால், சில்வார்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.