தமிழ்நாடு

தேனியில் யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரிப்பு: காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவர் கைது

தேனியில் யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரிப்பு: காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவர் கைது

நிவேதா ஜெகராஜா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே யூடியூப் வீடியோக்களை பார்த்து வெடிமருந்துகளை தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வனச்சரக எல்கைக்கு உட்பட்ட காப்புக்காடு, சந்த மலைப் பகுதியில் காலை வனக்காவலர்கள் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு இரு நபர்கள் வந்துள்ளனர். வனக்காவலர்களை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து வனக் காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து, சாக்கு பையை கைப்பற்றி பார்த்ததில், அதில் 200 கிலோவிற்கு மேல் உள்ள வெடி வைத்து வேட்டையாடிய காட்டுப் பன்றி மற்றும் வெடிமருந்தும் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர்.

மேலும் விசாரணையில் இவர்கள் ஆண்டிபட்டி வட்டம் பாலக்கோம்பையில் உள்ள காந்தி என்பவர் மகன் சிவக்குமார் (26) , ஏத்தக் கோவில் பெருமாள் மகன் வேல்சாமி (வயது 29) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் யூடியூப் பார்த்து வெடி மருந்து தயார் செய்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த இருவரும் தொடர்ந்து இதே போன்று வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.இதனையடுத்து வனச்சரகர் நாகராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.