தமிழ்நாடு

கொடைக்கானல் : ஒரு ஏக்கரில் கஞ்சா செடிகள்..! 2 பேர் கைது

கொடைக்கானல் : ஒரு ஏக்கரில் கஞ்சா செடிகள்..! 2 பேர் கைது

webteam

கொடைக்கானல் தூண்பாறை சுற்றுலா தல வனப்பகுதிக்குள், ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிட்டிருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தலமான தூண்பாறை பள்ளத்தாக்கின் பின்புறம்,  அடர்ந்த வனப் பகுதிக்குள் சிலர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்று வருவதாகவும், அவர்கள் கஞ்சா பயிரிட்டு இருக்கலாம் எனவும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் மற்றும் வன ஆய்வாளர் பழனிவேல் தலைமையில், காவலர்கள் அந்த பகுதிகளுக்குள் அதிரடி சோதனைக்கு சென்றனர்.

அங்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாறைகளுக்குள் மூட்டை மூட்டையாக உலர்த்தப்பட்ட கஞ்சா அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அதன் அருகே வனப்பகுதிக்குள் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பதுங்கியிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் வில்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.

அவருடன் கும்பூரை சேர்ந்த பிரசாந்த் மற்றும் உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி மற்றும் வீரமணி ஆகிய நால்வரும் இந்த செயலில் ஈடுபட்டிருந்ததும் காவல்துறை  விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் கொடைக்கானலை சேர்ந்த சக்திவேல் மற்றும் பிராசந்த் ஆகிய இருவரை கைது செய்த காவல் துறை, உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி மற்றும் வீரமணியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் அங்கு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உலர் கஞ்சாவையும், கஞ்சா செடிகளையும் காவல்துறை  மற்றும்  வனத்துறையினர் இணைந்து தீயிட்டு அழித்தனர்.