விஜய் - நீயாநானா சிறுவன் web
தமிழ்நாடு

வலியை மீறி அம்மாவுக்காக உடைந்துபேசிய சிறுவன்.. கல்வி கட்டணம் முதல் வீட்டு சாமான்கள் வரை உதவிய விஜய்!

Rishan Vengai

ஒரு சினிமா என்ன செய்யும்?

ஒரு சமூகத்தின் வலியை ஒட்டுமொத்த மக்களுக்கும் கடத்தி, மற்றவர்களுக்காக துடிக்கும் மனிதாபிமானத்திற்கு உயிர்கொடுக்கும்.

இதற்கு சான்றாக அமைந்துள்ளது மாரி செல்வராஜ் இயக்கிய ’வாழை’ திரைப்படம். எங்கேயோ செய்தித்தாள்களில் பார்த்தோ, வாய்மொழியாக கேட்டோ சாதாரண சம்பவங்கள் என நாம் கடந்துசெல்லும் ஒன்றின் பின்னணியில், எத்தனை ஆழமான அரசியலும் வலியும் இருக்கிறது என்பதை மனதிற்கு நெருக்கமாக காட்டியிருக்கும் ’வாழை’ திரைப்படம் எல்லோருடைய மனதையும் பாரமாக்கியுள்ளது.

வாழை

அழுத்தமான கதைக்களத்தை எடுத்து படமாக்குவது மட்டுமில்லாமல், அதை ரசிகர்களுக்கும் எளிமையான முறையில் எடுத்துச்சென்று நெருக்கமான சினிமாவாக காட்டுவதில் மேலும் மேலும் தேர்ச்சி பெற்றவராக மாறிவருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

இந்நிலையில் வாழை திரைப்படத்தின் எதிரொலியாக நேற்று நடந்த நீயா-நானா நிகழ்ச்சியில் “படித்துக் கொண்டே வேலைக்கு போகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள்” என்ற தலைப்பில் பேசப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்துகொண்டார்.

ஒரு பக்கமா பேசுறிங்களே கழுத்துல வலி இருக்கா?

இந்நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொரு சிறுவர்களின் பின்னாலும் ஒரு அழுத்தமான கதை அமைந்திருந்தது. அதில் கோவில்பட்டியை சேர்ந்த மாணவர் ஒருவர் பேசுகையில், “'நான் மூட்டை தூக்குகிறேன். ஒரு மூட்டை 10 கிலோ இருக்கும், அந்த மூட்டையை தூக்கும்போதெல்லாம் கழுத்து பயங்கரமாக வலிக்கும். வீட்டில் அதை சொல்லிக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

அப்போது ‘ஒருமாதிரி ஒருபக்கமா சாஞ்சியே பேசுறீங்களே... இன்னும் வலி இருக்கா’ என தொகுப்பாளர் கோபிநாத் கேட்க, “ஆமாம் சார் வலி எப்பவுமே இருக்கும். சாயங்காலம் ஸ்கூல் முடிச்சு 5 மணிக்கு வேலைக்கு போனா வேலை முடிஞ்சி கிளம்ப 10 மணி ஆயிடும். சில சமயம் கடைசி பேருந்தை விட்டுவிட்டா, இரவு பத்து மணிக்கு மூன்று கிலோமீட்டர் வரை நடந்தே போவேன். என் அம்மாக்கு எலும்பு தேய்மானம் இருக்கு, அவங்க கீழதான் படுத்துப்பாங்க, அங்களுக்கு ஒரு பெட் வாங்கனும். எனது தாயையும், தந்தையையும் நல்ல இடத்தில் அமர வைக்க வேண்டும்” என உடைந்த குரலில் பேசினார்.

உடனடியாக உதவிகளை வழங்கிய விஜய்!

சிறுவனின் இந்த வீடியோவை பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அச்சிறுவனின் அம்மாவுக்கு ஒரு மெத்தை, வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்துள்ளார். மாணவர் அடுத்த மூன்று ஆண்டுகள் படிக்க தேவையான உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அக்குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபாய் பணத்தையும் அனுப்பியிருக்கிறார். இதை தவெக உறுப்பினர்கள் நேரடியாக சென்று செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மாணவனின் தாய் மனம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அச்சிறுவனின் மூன்று வருட படிப்பு செலவுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவதாகவும் தெருவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க சிறுவனின் வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் தமன், அச்சிறுவனுக்கு பைக் வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.