சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் நேற்று மெரினாவில் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தின் எதிரொலியாக அரசை, பல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. கூட்டணிக் கட்சிகளும் விமர்சிக்கின்றன.
அந்தவகையில் திமுக கூட்டணி கட்சியான விசிக இந்த துயர சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருமாவளவன் “உயர்மட்ட விசாரணை தேவை” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான விஜய்யும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,
“சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.