தவெக மாநாடு, விக்கிரவாண்டி PT
தமிழ்நாடு

தவெக மாநாடு | நிரம்பி வழியும் தங்கும் விடுதிகள்.. வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கும் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், விக்கிரவாண்டி, விழுப்புரம் கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விடுதி அறைகள் நிரம்பியதால், தவெக தொண்டர்கள் வீடுகளை வாடகை எடுத்து தங்கியுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்களும், கட்சியின் தொண்டர்களும் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தவெக மாநாட்டிற்காக கடந்த இருபது தினங்களுக்கு முன்பே விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட விடுதிகளில் உள்ள அறைகளை மாநாட்டிற்கு வருபவர்கள் புக்கிங் செய்துள்ளனர்.

நிரம்பி வழியும் தங்கும் விடுதிகள்

இதனால் அங்கு வரும் தொண்டர்கள் ரூம்கள் கிடைக்காமல் வி.சாலை பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இதையடுத்து மாநாட்டு பாதுகாப்பிற்காக வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 10 எஸ்பி-க்கள், 50 டிஎஸ்பி-க்கள், 150 காவல் ஆய்வாளர்கள் உட்பட 4 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், தவெக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநாட்டுக்கு மக்களை அழைத்து வரும் வாகனங்களை டாஸ்மாக் அருகே நிறுத்தக் கூடாது என்றும், மது அருந்திவிட்டு வருபவர்கள் மாநாட்டு பந்தலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.