G.O.A.T. முகநூல்
தமிழ்நாடு

விஜய்யின் GOAT படத்தின் தலைப்பு, 'சனாதனம்'? ரவிக்குமார் MP கருத்துக்கு தவெக பொதுச்செயலாளர் பதில்!

நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கோட் திரைப்படத்தின் தலைப்பில் சனாதனம் இருப்பதாக விழுப்புரம் மக்களவை எம்.பி டி. ரவிக்குமார் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கோட் திரைப்படத்தின் தலைப்பில் சனாதனம் இருப்பதாக விழுப்புரம் மக்களவை எம்.பி டி. ரவிக்குமார் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இதில் இதுவரை என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்...

விசிக எம்.பி ரவிகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ”விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?

‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!.. ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு, பாஜக தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். அதில் அவர், “எங்களிடம்தான் சனாதனத்தை பார்த்தார்கள் என்றால் தற்பொழுது தம்பி விஜய் அவர்களிடமும் சனாதனத்தை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். முதலில் சனாதனம் என்றால் என்ன என்பது ரவிக்குமாருக்கு தெரியுமா? சனாதனம் என்பது என்ன என்பது ரவிக்குமாருக்கு தெரியவில்லை. எங்களுக்கு கோட் (GOAT) பிரச்னை இல்லை ஓட்டுதான் பிரச்சனை..” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள தவெக பொதுச்செயலாளர் புதுவை என்.ஆனந்த் "படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நமக்கு அளித்த முழு பேட்டியை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்...