தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ல வி.சாலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அக்கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முதல் அரசியல் மாநாட்டில் ”திராவிட மாடலை எதிர்க்கிறோம், மதப்பிரிவினைவாத அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு” உள்ளிட்ட முக்கிய கொள்கைகளை முழங்கிய விஜய் தமிழக அரசியல் களத்தில் டாக் ஆஃப் தி ஷோவாக மாறியுள்ளார்.
இந்நிலையில் முதல் அரசியல் மாநாடு முடிவடைந்த நிலையில், நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல் மாநாடு சிறப்பாக நடந்து முடிக்க காரணமாக இருந்த நிர்வாகிகள், கட்சி தோழர்கள் மற்றும் வருகை தந்து ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி தெரிவித்து மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன். கட்டுப்பாடான. கண்ணியமான, ஆரோக்கியமான, உத்வேகமான. உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர்.
நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.
அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக இருக்கும்.
நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக. இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான. மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி. தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர்.
ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன.
நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே. நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும்.
எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம்” என்று தெரிவித்துள்ளார்.