தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடங்கியுள்ளது. சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் மக்களுக்காக சேவையாற்றும் வகையில் அரசியல் களத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் விஜய்.
கட்சிக்கொடி அறிமுகத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ முதல் அரசியல் மாநாடானது விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், மாநாட்டின் செயல்திட்டம், தீர்மானங்கள் என்னவாக இருக்கப்போகின்றன என்ற எதிர்ப்பார்ப்பு பெரிதாக எழுந்துள்ளன.
தமிழ்க வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் 4 மணிக்கு மாநாட்டில் பங்கேற்றார். தொண்டர்களின் நடுவில் ராம்ப்பில் நடந்து சென்ற விஜய், தொண்டர்கள் வீசிய கட்சி கொடியை தன் தோள்களில் போட்டுக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய படி அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றிவைத்தார். 100 அடி உயரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி புதிய மாற்றத்திற்காக கம்பீரமாக பறக்க ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து கட்சிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டு, கட்சி கொள்கை பாடல் ஒலிக்கவிடப்பட்டது. அதில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என தொடங்கிய பாடலின் முடிவில் விஜய் பேசும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன.
அதில் பேசிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என கூறிய ஆதியோன் திருவள்ளுவரின் வழியில், நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பார்போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி மத பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு ‘நான் வரேன்’...” என்று உணர்ச்சிமிக்க பேசியுள்ளார்.