தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று நடைபெற்றது. தொண்டர்களின் ஆர்ப்பரிப்புடன், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலுடன் மாநாடு தொடங்கியது. கலைநிகழ்ச்சிக்கு பின்னர் உற்சாகமாக மாநாட்டு மேடைக்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.
தொடர்ந்து, அங்குள்ள விடுதலைப் போராளிகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிற்கு 100 உயர கம்பத்தில் தன் கட்சிக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தவெகவின் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, கொள்கைப் பாடல் வெளியாகி இருந்தது. அதில் விஜய் குரலும் இருந்தது. இதையடுத்து கட்சியின் கொள்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து உரையாற்றிய விஜய், “நாம் யாரு, நாம் எவ்வளவு ஸ்ட்ராங்க் என்பதை எல்லாம் சும்மா வாயால் சொல்லக்கூடாது. அதை செயலில் காட்ட வேண்டும். அதை நிரூபிக்க அரசியலில் என்ன ஸ்டேண்டர்டு எடுக்கப்போகிறோம் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டியதுதான் நம்முடைய கடமை.
‘என்னது, பெரியார் உங்கள் கொள்கைத் தலைவரா?’ என ஒரு கூட்டம் நம்மை கேட்டுக்கொண்டே ஒரு பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு செல்வார்கள். இந்த பெயிண்ட் டப்பா பிசினஸுக்கு நான் அப்புறம் வருகிறேன். ஆமாம், பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். ஆனால் பெரியார் சொன்ன கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போறது இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுளின் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை.
அரசியலில் அண்ணன் தம்பி உறவை அறிமுகப்படுத்திய
அறிஞர் அண்ணா சொன்னது போல, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடும்.
ஆனாலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை என பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்கப் போகிறோம். பெரியாருக்குப் பிறகு எங்கள் கொள்கைத் தலைவர் பச்சைத் தமிழர் பெரும்தலைவர் காமராஜர். அவர் இந்த மண்ணில் மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாகச் செயல்பாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தார்.
அவரை, எங்களை வழிகாட்டியாக ஏற்கிறோம். இந்த துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கிக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவில் இந்தப் பெயரைக் கேட்டால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துபவர்கள் எல்லாம் நடுங்கிப் போவார்கள். அவரையும் எங்களை வழிகாட்டியாகச் சொல்வதில் பெருமைப்படுகிறோம். பெண்களை, கொள்கைக் தலைவர்களாக ஏற்று முதல் அரசியல் கட்சி நம்முடைய தவெகதான்.
அந்த வகையில் நம்முடைய இரண்டு பெண் வழிகாட்டிகளில் ஒருவர், வேலுநாசியார். மற்றொருவர் அஞ்சலையம்மாள். இவர்களை மனதில் நம்மை அவர்கள் வேகமானவர்கள்; விவேகமானவர்கள் என்று சொல்ல வேண்டும். அப்படி எல்லோரையும் சொல்ல வைக்கிற மாதிரி நாம் செயல்பட வேண்டும். சொல் முக்கிமல்ல.. செயல்.. செயல்... செயல் என்பதுதான் முக்கியம். மாற்று அரசியல் மாற்று சக்தி என்பதை எல்லாம் நாம் செய்யப் போவது இல்லை.
நான் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறேன். பின்வாங்கப்போவது இல்லை. இந்த முடிவு நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. நாங்கள் எடுத்த முடிவு. எதற்கும் நம்முடன் தைரியமுடன், சக்தியாய் நிற்கிற மக்களுடன் முடிவு.
இது, குடும்பமாய், கூட்டமாய் ஏமாற்ற வந்த கூட்டம் அல்ல. பவரை கையில் வைத்துக்கொண்டு தனக்கு அடிபணியாதவர்களை பகையை தீர்க்க வந்த கூட்டம் அல்ல. பக்கா பிளானோடு வந்த கூட்டம். இங்கே ஒரு கூட்டம் நீண்டகாலமாக, ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட சாயத்தைப் பூசிக்கொண்டு, பூச்சாண்டி காட்டிக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது.
இவர்களுக்கு எப்போது பார்த்தாலும் பாசிசம்.. பாசிசம்.. அவ்வளவுதான். ஒற்றுமையாக இருக்கிற மக்கள் மத்தியில் சிறுபான்மை பெரும்பான்மை என பாகுபாடு காட்டி பிரிக்கிறதே ஒரு வேலையாகப் போய்விட்டது. நான் தெரியாமல் கேட்கிறேன்? அவர்கள் பாசிசம் எனில், நீங்கள் என்ன பாயாசமா? நீங்களும் அவர்களுக்கு கொஞ்சம்கூட சளைக்காதவர்கள்தான்.
மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனச் சொல்லி மக்களை கடுமையாக ஏமாற்றுகிறார்கள். அதனால் இனி, உங்களை எதிர்ப்பவர்களுக்கு மோடி மஸ்தான் வேலை செய்தாலும் அது ஒன்றும் நடக்காது.
ஏனெனில் எங்கள் கோட்பாடே பிறப்பால் சமம் என்பதுதான். அடுத்து திராவிட மாடல் என தந்தை பெரியார், அண்ணா பெயர்களைக் கொண்டு தமிழகத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கிற ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம்தான் நம்முடைய அடுத்த எதிரி. அரசியல் எதிரி.
கொள்கை கோட்பாட்டளவில் நாம் தேசியத்தையோ, திராவிடத்தையோ பிரித்துப் பார்க்கப்போவதில்லை.
கூத்தாடி என்பது கெட்டவார்த்தையா? கூத்து என்பது சாதாரண வார்த்தையல்ல. கூத்து சாத்தியத்தைப் பேசும்; சத்தியத்தைப் பேசும்; கொள்கை, கோட்பாடு, சோகம், கோபம் என அனைத்தையும் பேசும். மக்கள் மத்தியில் ஒரு டீசண்டான அரசியல் செய்யத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்” என உரையாற்றினார்.
இந்நிகழ்வில், விஜய் ஒரு குட்டிக்கதையும் கூறினார். அதை, இங்கே காணலாம்: