நடிகர் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

10th, 12th மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. காலை 6 மணிக்கு முன்பே அரங்கிற்கு வந்தார் விஜய்!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்க, காலை 6 மணி அளவிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு விரைந்தார் நடிகர் விஜய்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்க, காலை 6 மணி அளவிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு விரைந்தார் நடிகர் விஜய்.

2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று விருது வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் செய்யப்பட்டுள்ளது.

2 நாட்கள் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது, இன்று காலை 7.15 மணிக்கு தொடங்கி மாலை 6 வரை முதல் நாள் நடைபெற உள்ளது. இதே போல 2 வது நாள் நிகழ்ச்சியும் வருகிற 3 ம் தேதி காலை 7.15 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இதில் பங்கேற்க இன்று காலை 6 மணி அளவில் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்தார் நடிகர் விஜய். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட குழப்பங்களை தவிர்க்க அதிகாலையிலேயே விழா அரங்கிற்கு சென்றார். தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து ஏற்பாடுகளை அறிய தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்துடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், 750 விருதுகள் வழங்கப்படுகிறது. இதில், 3500 மாணவ- மாணவிகளும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்க உள்ளதாக காவல்துறைக்கு அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தவகையில், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து வகையான அடிப்படை வசதிகளுமே அந்தந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்கள் சார்பாக செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அதில், QR கோடு வழங்கப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்து உறுதி செய்தபின்னரே, அரங்கிற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

முன்னதாக நேற்றைய தினமே, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போலீஸ் பாதுகாப்பு கேட்டு திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.இதன் அடிப்படையில், விழாவிற்கு உள்ளரங்கு பாதுகாப்பிற்காக ஒரு உதவி ஆணையர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நிகழ்ச்சியின் போது தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்ய போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் கல்வி விருது விழா - மாணவர்கள் வருகை

விஜய்யுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், ”தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று காலை 9.30 மணிக்கு கல்வி விருது வழங்கப்படும். 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் விழா அரங்கிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ” என்று தெரிவித்தார்,