vijay and eps pt
தமிழ்நாடு

"அன்பும், நிம்மதியும் நிலைக்க, நல்லிணக்கம் வளர.." - தமிழக அரசியல் தலைவர்கள் ரமலான் பண்டிகை வாழ்த்து!

ரமலான் திருநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரமலான் வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், விஜய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யுவபுருஷ்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை நோன்பு கடைபிடித்து, ஏழை- எளியவர்களுக்கு உதவி செய்வது வழக்கம். வானில் தென்படும் பிறையின் அடிப்படையில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில், இந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தமிழகத்தில் ரமலான் பிறை கடந்த 9ஆம் தேதி தெரியாததால், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்தி கொண்டாடி வருகின்றன.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதையும், கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய நாளில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், தமிழ்நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மநீம தலைவர் கமலின் பதிவில், “ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.